மக்கள் நிராகரித்த கட்சிக்கு பதிலளிக்க அவசியம் இல்லை; தமிழ்நாட்டை பற்றி பேச பாஜவுக்கு அருகதை இல்லை: அமைச்சர் நிர்மல்குமார் கொதிப்பு

 

மதுரை: தமிழ்நாட்டைப் பற்றி பற்றி பேச பாஜவிற்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மின்தடை குறித்து குற்றம் சாட்டியுள்ளார். பாஜவில் இருப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. அவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றி பேசுவதற்கான எந்த அருகதையும் இல்லை. தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி சொல்கிற விமர்சனத்தை பற்றி, இங்கு பேச வேண்டிய அவசியமில்லை.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின்சாரம் இல்லை என்று அவர்கள் சொன்னால் பேசலாம். பொத்தாம் பொதுவாக அவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக பேசுவதற்கெல்லாம் பதலளிக்க வேண்டியதில்லை. பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சந்திப்பு சம்பிரதாய சந்திப்பல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையானதை தெரிவிக்கவும், தேவையான நிதி ஆதாரத்தை தெரவிக்கவுமே இந்த சந்திப்பு. இது பியூர்லி அபிசியல் சந்திப்புதான். வேறு காரணம் இல்லை, தேவையும் இல்லை. அதிமுகவில் வேலுமணி போன்றோரின் செயல்பாடுகள் என்பது அதிமுக கட்சி விவகாரம், அந்த கட்சி விவகாரங்களை பேச யாருக்கும் உரிமை இல்லை. அதிமுகவை சிதைத்தது விஜய்தான் என கூறுகிறீர்கள். அது அவர்களுக்குள்ளான பிளவு. இதை அவர்களே பத்திரிகைகளில் தெரிவித்துள்ளனர்.

“மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே அந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் கண்டிப்பாக, அதை நிறுத்துவதற்கான அனைத்து சட்டப்பூர்வ வேலைகளையே மேற்கொள்வார். இப்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களும் அதே தொகுதியில் போட்டியிடுவதெல்லாம் அவர்கள் தனிப்பட்ட முடிவு. அதைப்பற்றி தற்போது கருத்து தெரிவிக்க இயலாது. இவ்வாறு தெரிவித்தார். அப்போது, ‘முதலமைச்சர் விஜய் மக்களை எப்போது சந்திக்கப் போகிறார்?’ என கேட்டதற்கு, அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

Related Stories: