பீகார் அரசியலில் பரபரப்பு; சாதியை கேட்டு என்கவுன்டர்’ ெசய்றாங்க! தேஜஸ்வி குற்றச்சாட்டுக்கு பாஜக முதல்வர் கிண்டல்

 

பாட்னா: பீகாரில் சமீபகாலமாக நடைபெற்று வரும் போலீஸ் என்கவுன்டர்கள், சாதி அடிப்படையிலானவை என ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி கடும் பதிலடி கொடுத்துள்ளார். பீகாரில் குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், ‘போலீசார் குற்றவாளிகளின் சாதியை கேட்டுவிட்டு, அதன் பின்னரே என்கவுன்டர் செய்கின்றனர்’ என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், போலீஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முதல்வர் சாம்ராட் சவுத்ரி பேசுகையில், ‘சிலர் என்கவுன்டர் நடந்தால், போலீசார் முதலில் குற்றவாளியின் சாதியை கேட்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் போலீசாருக்கு சொல்லிக்கொள்வது இதுதான்; தாராளமாக சாதியை கேட்டுவிட்டு, அதன் பிறகு சுடுங்கள்’ என்று கிண்டலாக (குறிப்பிட்ட சாதிக்காக அரசியல் கட்சி நடத்துவது குறித்து மறைமுகமாக சாடல்) பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இது போன்ற அர்த்தமற்ற கருத்துகளை பேசுபவர்களுக்கு பொது அறிவு இல்லை. மாநிலத்தில் நல்லாட்சியை நிலைநாட்டுவதே எங்களது அரசின் முதன்மையான கடமை. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இல்லை. போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரை யாராவது சவால் விட்டால், 48 மணி நேரத்திற்குள் உரிய பதில் கிடைக்கும். பிரதமர் மோடி மற்றும் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆசியுடன், பீகார் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. முதலீடுகளை ஈர்க்க சட்டம்-ஒழுங்கு மிகவும் அவசியம், அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்று தெரிவித்தார்.

 

Related Stories: