தவெகவுக்கு வாக்களிக்க பெற்றோரை நிர்பந்திக்க குழந்தைகளிடம் பிரசாரம் விசாரணை கோரி பொதுநல வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு வாக்களிக்குமாறு பெற்றோரை நிர்பந்திக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்து தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடைமுறையின் புனிதம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, சிறுவர்களை சுரண்டியது என்று திமுக, அதிமுக, தவெக கட்சியினர், வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய், தவெகவுக்கு வாக்களிக்குமாறு பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று குழந்தைகள் மீது உணர்வுப்பூர்வமாக செல்வாக்கை செலுத்தியுள்ளார்.
இது பரவலாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக மயிலாப்பூர், ஆலங்குளம், திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரவில்லை. தேர்தல் நடவடிக்கைகளில் குழந்தைகள் மீது செல்வாக்கை செலுத்தியது பணப்பட்டுவாடா உள்ளிட்ட ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மே 29ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, தவெக கட்சிகளுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: