தமிழ்நாட்டு அமைச்சரவை இன்று விரிவாக்கம்; புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு: ஆளுநர் மாளிகை அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவை தொடர்ந்து அக்கட்சி ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக விஜயும் அமைச்சர்களாக ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 பேரும் பொறுப்பேற்றனர்.

மேலும் அமைச்சர்களுக்கு கடந்த 16 ஆம் தேதி துறைகள் ஒதுக்கப்பட்டன. தமிழ்நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் மற்​றும் 33 அமைச்​சர்​கள் இடம் பெறலாம். தற்​போது முதலமைச்சர் மற்​றும் 9 அமைச்​சர்​கள் மட்​டுமே உள்​ளனர். அதனால் அமைச்​சரவை விரிவாக்கம் செய்​யப்பட வேண்​டிய அவசி​யம் உள்​ளது. தவெக சார்பில் தமிழ்நாடு அமைச்சரவையில் பங்கேற்க கோரி காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் பதவிக்கு ராஜேஷ் குமார் மற்றும் பி.விஸ்வநாதன் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆட்சியில் பங்கெடுக்க மாட்டோமென்று கூறிவிட்டனர். விசிக மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் முதலைச்சர் முன்னிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதில் தவெக சார்பில் 18 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் சார்பில் 2 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: