சென்னை: அரசு மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறிய தவெகவினருக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி என்ற பெயரில் மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியுள்ளனர். தவெக மாவட்டச் செயலாளர் என்ற பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தவெகவினர் செயல் கடும் கண்டனத்துக்குரியது’ என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் – மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.
தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் “யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்” என்று சூளுரைத்த முதலமைச்சர் விஜய், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
மேலும் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.
ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.
எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனவும் டிடிவி தெரிவித்துள்ளார்.
