×

டெல்லி செல்லும் முதல்வர் விஜய்க்கு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட அழுத்தம் கொடுக்க திட்டம்: மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர கங்கணம் கட்டும் ஒன்றிய அரசு

 

சென்னை: டெல்லி செல்ல உள்ள முதல்வர் விஜய்க்கு பி.எம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட அழுத்தம் கொடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதும், முதல் மிரட்டல் ஒன்றிய அரசிடம் இருந்து தான் வந்தது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தவெக அரசு கையெழுத்திட வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக தவெக அரசின் கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த இரு ஆண்டுகளாக கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்றும் மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்காக ஒன்றிய அரசின் மறைமுக அழுத்ததிற்கு அடிபணியமாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார்.

பி.எம்.ஸ்ரீ திட்டம் கையெழுத்திடப்பட்டால் தமிழக கல்வி துறையில் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடுமென கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக மாநிலங்களின் நிதிச் சுமை மற்றும் சமத்துவமின்மை அதிகரிக்கும். இத்திட்டத்திற்கான செலவில் 60 சதவீதம் ஒன்றிய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் ஏற்க பட்சத்தில் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநிலங்களுக்கு இது கூடுதல் சுமையாக மாறும். பி.எம்.ஸ்ரீ திட்டம் எல்லா பள்ளிகளையும் தரம் உயர்த்தாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான (சுமார் 14,500) பள்ளிகளை மட்டுமே ‘மாதிரிப் பள்ளிகளாக’ மாற்றும். இதனால், அதே பகுதியில் உள்ள மற்ற சாதாரண அரசுப் பள்ளிகள் உள்கட்டமைப்பிலும் நிதியுதவியிலும் புறக்கணிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு இடையே ஒரு சமத்துவமற்ற நிலை உருவாகி மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகும்.

கல்வி என்பது இந்திய அரசியலமைப்பின்படி ‘பொதுப் பட்டியலில்’ உள்ளது. ஆனால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கவும், வழிகாட்டவும் ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவதால், மாநிலங்களின் கல்வி சார்ந்த முடிவெடுக்கும் உரிமை பாதிக்கப்படும். பி.எம்.ஸ்ரீ திட்டம்தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்பதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த நிதி கிடைக்கும். ​தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இத்திட்டம் இருப்பதால், இது இந்தி அல்லது சமஸ்கிருத மொழிகளை மறைமுகமாகத் திணிக்கும் வாய்ப்பாக அமையலாம். இத் திட்டத்தில் தனியார் பங்களிப்பளிப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

இது காலப்போக்கில் ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வியைக் கேள்விக்குறியாக்கி, கல்வியை வணிகமயமாக்க வழிவகுக்கலாம். இதில், ஆரம்பக் கல்வியிலேயே மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் போன்ற அழுத்தங்களை கொண்டுவருவதால், அது கிராமப்புற மாணவர்களின் பள்ளிப் படிப்பைப் பாதிக்கும். இத்தகைய பாதிப்புகளை கருத்தில் கொண்டே திமுக பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இதுவரை கையெழுத்திடாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தான் தமிழக முதல்வர் விஜய் நாளை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க கோரி டெல்லி செல்ல உள்ளார். அங்கு கல்விக்கான நிலுவை நிதியை பெற பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட விஜய்க்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

* தமிழக முதல்வர் விஜய் நாளை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க கோரி டெல்லி செல்ல உள்ளார்.
* கல்விக்கான நிலுவை நிதியை பெற பி.எம். திட்டத்தில் கையெழுத்திட விஜய்க்கு மீண்டும் அங்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tags : Delhi ,Chief Minister Vijay ,Union government ,Tamil Nadu ,Chennai ,Chief Minister ,Vijay ,Thaweka government ,Union government… ,
× RELATED ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய...