×

10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி: புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்

 

சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 94.31%. பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த 5 மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை மாவட்டம் 97.42% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை சென்னைய கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வெளியிட்டு கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 467 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த பள்ளி மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்க மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 மாணவ மாணவியர் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் மாணவியர் 4 லட்சத்து 35 ஆயிரத்து 247, மாணவர்கள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேர் அடங்குவர். மொத்த மாணவ மாணவியரில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 94.31 சதவீதம். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவியர் 4 லட்சத்து 19 ஆயிரத்து 891 பேர்(96.47%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மணவர்களில் 4 லட்சத்து 1214(92.15%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 4.32 சதவீதம் கூடுலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மேற்கண்ட தேர்வில் 11 ஆயிரத்து 174 பேர் தேர்வு எழத வரவில்லை. கடந்த 2025 மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் மொத்த தேர்ச்சி வீதம் 93.80% சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டுக்கான தேர்வில் 0.51 சதவீதம் கூடுதல் தேர்ச்சி கிடைத்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற மொத்த பள்ளிகள் 12 ஆயிரத்து 467, இவற்றில் மேனிலைப் பள்ளிகள் 7490, உயர்நிலைப் பள்ளிகள் 4977. இவற்றில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 5171 ஆகும். 95% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 8233 ஆகும். அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 1931, 95 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 3463 ஆகும். 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியரின் எண்ணிக்கை: தமிழ் 34, ஆங்கிலம் 92, கணக்கு 3194, அறிவியல் 10476, சமூக அறிவியல் 3336. இவர்கள் தவிர ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 132, ஏதெனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 774 பேர்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் 5 மாவட்டங்கள் தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளன. 97.57% தேர்ச்சியை பெற்று புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.54% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், 97.41% தேர்ச்சி பெற்று தஞ்சாவூர் மாவட்டம் 3ம் இடத்தையும், 97.31 % தேர்ச்சி பெற்று திருச்சி மாவட்டம் நான்காம் இடத்தையும், 97.30% தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல, சிறப்பிடம் பெற்ற 5 மாவட்டங்களின் அரசுப் பள்ளிகளை பொருத்தவரையில், 97.42% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

97.09% தேர்ச்சி பெற்று புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 96.89 % தேர்ச்சி பெற்று தஞ்சாவூர் மாவட்டம் 3ம் இடத்தையும், 96.78% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 4வது இடத்தையும், 96.48% தேர்்ச்சி பெற்று திருச்சி மாவட்டம் 5ம் இடத்தையும் பிடித்துள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வில் 13 ஆயிரத்து 292 மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியர் தேர்வு எழுதி, 11 ஆயிரத்து 416 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 85.89% ஆகும். சிறை வாசிகள் 370 பேர் தேர்வு எழுதி 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 95.68%. பத்தாம் வகுப்பு தேர்வில் தனித் தேர்வர்கள் 24 ஆயிரத்து 353 பேர் எழுதியதில் 8 ஆயிரத்து 744 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்ச்சி வீதம் 35.91% ஆகும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவியர் இணைய தளம் மூலம் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள http://tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதங்களில் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் தாங்்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்த கொள்ளலாம். அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் , தனித் தேர்வர்கள் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இது தவிர தேர்வு முடிவுகள் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவியர் தங்களில் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை 22ம் தேதி முதல் பெறலாம். விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் 22ம் தேதி மதல் 27ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 8ம் தேதி மு தல் 15ம் தேதி வரை நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை மே 26ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். மறு மதிப்பீடு, மறு கூட்டல் செய்ய விரும்புவோர் ஜூன் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Tags : Pudukkottai ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய...