ஊட்டி: சீகூர் வனப்பகுதியில் பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. நீலகிரி மாவட்டம், கூடலூர் வன கோட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்நிலையில் சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் சிக்கோலை ஆற்றின் கரையோர பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை நேற்று முன்தினம் ரோந்து பணியின் போது வனத்துறை பணியாளர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் இறந்து கிடந்தது பெண் யானை என்பது தெரிய வந்தது. மசினகுடி கோட்ட துணை இயக்குநர் வித்யாதர் முன்னிலையில், தெப்பக்காடு கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யானையின் வயது சுமார் 45 முதல் 50க்குள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. யானையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
