×

பத்திரிகை சுதந்திர உரிமை மறுப்பு; மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் நிருபரின் சமூக ஊடக கணக்கு முடக்கம்: சர்வதேச ஊடகங்களில் விமர்சனம்

ஓஸ்லோ: நார்வேயில் இந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்ப முயன்ற ஊடகவியலாளரின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நார்வே நாட்டின் ஆஸ்லோவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹெலே லிங், அந்த நாட்டு பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டு ஊடக சந்திப்பின் போது, அவரிடம் கேள்வி எழுப்ப முயன்றார். பிரதமர் மோடி வெளியேறும்போது, ‘உலகின் சுதந்திரமான பத்திரிகைகள் இருக்கும் நாட்டில் ஏன் நீங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை?’ என்று அவர் உரக்கக் கேட்டார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. பின்னர் இந்திய தூதரகம் சார்பில் அவருக்கு பிரத்யேக செய்தியாளர் சந்திப்பு வழங்கப்பட்டாலும், லிங் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் பெரும் விவாதத்தை கிளப்பின. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இணையதளங்களில் அவருக்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமடைந்தன. அவர் மீது ‘வெளிநாட்டு உளவாளி’, ‘சீனாவின் பிரதிநிதி’ என பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதாக ஹெலே லிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில், ‘பத்திரிகை சுதந்திரத்திற்காக நான் கொடுக்கும் மிகச்சிறிய விலை இது. இதற்கு முன்னால் நான் இதுபோன்ற அனுபவத்தை எதிர்கொண்டது இல்லை. மீண்டும் எனது கணக்குகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் நார்வே முதலிடத்திலும், இந்தியா 157வது இடத்திலும் இருப்பதை சுட்டிக்காட்டிய லிங், ‘நான் எந்தவொரு வெளிநாட்டு அரசாலும் அனுப்பப்பட்ட உளவாளி அல்ல. எனது பணி இதழியல் மட்டுமே’ என்று தெளிவுபடுத்தினார். இந்த சர்ச்சை காரணமாக லிங்கின் எக்ஸ் தள பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 800-ல் இருந்து 45,000 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Modi ,Oslo ,Indian Prime Minister ,Norway ,Hele Ling ,Oslo, Norway ,Prime Minister of India ,
× RELATED சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக...