- லோவர்காம்ப்
- பெரியாரு அணை
- கூடலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- லோவர்காம்ப் பவர் ஸ்டெஷன்
- முல்லைப்பிரியத் அணைகள்
- முல்லைபெரியரு அணை
- போர்வே அணை
கூடலூர்: பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து, தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், லோயர்கேம்ப் மின்நிலையம் மற்றும் முல்லைப்பெரியாற்று தடுப்பணைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறுபுனல் மின்நிலையங்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு ‘‘போர்வே டேமிலிருந்து 4 ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மூலம் தேனி மாவட்டம், கூடலூர் அருகே, லோயர்கேம்பில் நீர் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின்உற்பத்தி நிலையத்தில் உள்ள 4 ஜெனரேட்டர்கள் மூலம் 42 மெகாவாட் வீதம், 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. பெரியாறு அணையிலிருந்து குறைந்தபட்சம் 250 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே லோயர்கேம்பில் மின் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்.11ம் தேதி முதல் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 256 கனஅடியில் இருந்து 200 கனஅடியாக குறைக்கப்பட்டு இரைச்சல் பாலம் வழியாக திறந்துவிடப்படுகிறது. இதனால், லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
சிறு புனல் நீர் மின்உற்பத்தி நிலையங்கள் லோயர்கேம்ப் அருகே எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி குருவனூத்து ஆற்றுப்பாலம், கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய நான்கு இடங்களில் சிறிய அளவிலான பெரியாறு-வைகை சிறுபுனல் நீர் மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், இரவங்கலாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் கொண்டு சுருளியாறு மின்நிலையத்தில், ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.
இவற்றில் குருவனூத்து காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு ஆகிய இடங்களில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் 6 மெகாவாட் மின்சாரமும், குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள இரண்டு ஜெனரேட்டர்கள் மூலம் தலா 1.25 மெகா வாட் என மொத்தம் 2.50 மெகாவாட் மின்உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த துணைமின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேனி, வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. லோயர்கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையம் மற்றும் நான்கு சிறு புனல் மின் உற்பத்தி நிலையங்களில் முல்லைப் பெரியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவை பொறுத்தே மின்உற்பத்தி நடைபெறும். பெரியாற்றில் இருந்து தமிழகத்திற்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே நிறுபுனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி நடைபெறும்.
இதனிடையே கடந்தாண்டு அக்.17ம் தேதி நள்ளிரவு பெய்த கனமழையால், குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லைப் பெரியாற்றில் தடுப்பணை உடைந்து, அங்கு இயங்கி வந்த சிறு புனல் மின்உற்பத்தி நிலைத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், ஜெனரேட்டர்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்தன. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது வரை அங்கு மின்உற்பத்தி இல்லை.
பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், கடந்த பிப்.23ம் தேதிக்குப்பின் குருவனூத்து, காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு பகுதி சிறு புனல் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி இல்லை. மொத்தத்தில் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்திலும், சிறுபுனல் நீர்மின் உற்பத்தி நிலையங்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 293 கனஅடி. அணையிலிருந்து தமிழகத்திற்கு இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 111.50 அடி. நீர்இருப்பு 1150.50 மில்லியன் கன அடியாக உள்ளது.
