குடகு: குடகு துபாரே முகாமில் பராமரிப்பு யானைகளின் மோதலின் போது ஒரு யானை கீழே விழுந்ததில் அதன் அடியில் சிக்கிய சென்னையை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவில் துபாரே யானைகள் முகாம் உள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்றான இதில், சுமார் 27 யானைகள் பராமரிக்க்பபட்டு வருகிறது. காலையில் இந்த யானைகளை காவிரி நதியில் குளிப்பாட்டி வனப்பகுதிக்கு விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் துபாரே யானைகள் முகாமை நேற்று சுற்றிப்பார்த்தனர்.
காவிரி ஆற்றில் காலையில் யானைகளை குளிப்பாட்டி கொண்டிருந்த போது சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் குவிந்திருந்தனர். யானைகள் குளிப்பதை மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது கஞ்சன் என்ற யானைக்கும் மார்த்தாண்டா என்ற யானைக்கும் மோதல் ஏற்பட்டது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினர். பாகன்கள் யானைகளை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்த போதே கஞ்சன் யானை ஆக்கிரோஷமாகி முட்டித்தள்ள மார்த்தாண்டா யானை நிலைத்தடுமாறி ஆற்றங்கரையில் கீழே விழுந்துள்ளது.
அப்போது, சம்பவ இடத்தில் இருந்து ஓட முடியாமல் அருகிலேயே நின்றிருந்த சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஜின்னு (33) யானையின் அடியில் சிக்கி கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ஜோயல் கையில் குழந்தையுடன் அவரை மீட்க கடுமையாக போராடியுள்ளார். ஆனால் முடியாமல் போனது. உடனே அங்கிருந்த வனத்துறையினர் உடனடியாக வந்து பெண்ணை மீட்டு குஷால்நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே ஜின்னு இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், காயமடைந்த அவரது கணவர் ஜோயலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில், ஜோயல் கையில் இருந்த குழந்தை ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனிடையில், மடிக்கேரி எம்எல்ஏ மந்தர்கவுடா இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக குஷால்நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறுகையில்,‘‘ முழு விசாரணை நடத்தி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
