தெரு நாய்களை பொது இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..!!

புதுடெல்லி: தெரு நாய்களை பொது இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொது இடங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவில் மாற்றமில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பாக கடந்த நவம்பர் 2025 உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

குறிப்பாக, பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை கருத்தடை செய்த பிறகு அதே இடங்களில் விடக்கூடாது என்ற தனது உத்தரவை திரும்பப் பெற நீதிமன்றம் மறுத்து விட்டது. நாய்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது, அவற்றுக்குத் திசையறிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி, மேலும் பல தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்று விலங்குரிமை ஆர்வலர்கள் வாதிட்டிருந்தனர். இருப்பினும், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி சந்தீப் மேத்தா மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வாதத்தை ஏற்கவில்லை, மேலும் பொது இடங்களில் தெருநாய்கள் இருப்பது “கவலைக்குரியது” என்றும் குறிப்பிட்டது.

விலங்குகள் மக்களை, குறிப்பாக குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்களை புறக்கணிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. கடந்த நவம்பர் 7-ல் வழங்கப்பட்ட தீர்ப்பைத் திரும்பப் பெறக் கோரும் மனுக்களை நாங்கள் விரிவாகப் பரிசீலித்தோம், முடிவில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளோம்,” என்று உச்சநீதிமன்றம் கூறியதுடன், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் நெறிமுறைகளில் தலையிட மனுதாரர்கள் எந்த சரியான காரணத்தையும் முன்வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டது.

முந்தைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக மாநில அரசுகளையும் நீதிமன்றம் விமர்சித்தது. தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கேற்ப உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், அதன் அளவை நிர்ணயிக்கவும் முயற்சிகள் வெளிப்படையாகவே இல்லை. அந்த முயற்சிகள் அவ்வப்போது மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. கருத்தடை மற்றும் தடுப்பூசி முகாம்கள் திட்டமிடப்படாமலேயே நடைபெற்றன.

இது (விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு) கட்டமைப்பின் நோக்கங்களையே முறியடிக்கிறது,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் தெரு நாய்கள் தொடர்பாக விலங்குகள் நல வாரியம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: