திருமலை,: முதலிரவின்போது தன்னை பற்றி எதையும் மறைக்காமல் கணவர் தெரிவித்த தகவலால் அதிர்ச்சி அடைந்த புதுப்பெண், திருமணமான 23 நாளில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கோனேடாவை சேர்ந்தவர் வெங்கடேசலு மகள் வெங்கடலட்சுமி (25), பட்டதாரி. இவருக்கும் மார்லாவாவை சேர்ந்த துர்காகோடேஸ்வர ராவ் (30) என்பவருக்கும் கடந்த மாதம் 25ம்தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்றிரவு பெண் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்.
அப்போது துர்காகோடேஸ்வரராவ், தனது மனைவியிடம் தன்னை பற்றி மறைக்காமல் முழுமையாக தெரிவிக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி தனது பழைய நட்பு, காதல் மற்றும் அந்தரங்க விவரங்கள் குறித்து கூறியுள்ளார். தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக தனது செல்போனில் வைத்திருந்த சில வீடியோ மற்றும் போட்டோக்களை காட்டியுள்ளார். இதையறிந்த புதுப்பெண் வெங்கடலட்சுமி கடும் அதிர்ச்சியடைந்தார்.
இதனால் கணவருடன் சரிவர பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன் தனது தாய் வீட்டுக்கு வெங்கடலட்சுமி வந்தார். அப்போது தனது கணவர் முதலிரவன்று கூறியவற்றை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை சமாதானம் செய்தனர். மனவேதனையில் இருந்த வெங்கடலட்சுமி தனது தாய் வீட்டில் உள்ள படுக்கையறையில் நேற்று முன்தினம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பிரதிபாடு போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து துர்காகோடேஸ்வர ராவ் மற்றும் அவரது தாய் நூக்கமணி ஆகிய இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.
