மதுரை: மதுரை அருகே, கள்ளந்திரி கண்மாயில் இன்று காலை பாரம்பரிய சமத்துவ மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கட்லா, ஜிலேபி, கெண்டை மீன்களை அள்ளிச் சென்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர், வெள்ளரிப்பட்டி, மேலவளவு, குருத்தூர், கள்ளந்திரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெறும். இந்த நிலையில், மதுரை கிழக்கு ஊராட்சி உட்பட்ட அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரியில், அம்மச்சியாபுரம், தொப்புலான்பட்டி உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட ஐந்து கோயில் முத்தன் கண்மாய் உள்ளது.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த கண்மாயில் ஐந்து கோயில் சாமியிடம் வேண்டுதல் வைத்து, நிறைவேறிய பக்தர்கள் மீன் குஞ்சுகளை வாங்கி காணிக்கையாக கண்மாயில் விடுவர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, மீண்டும் அழகர்மலைக்கு வந்து சேர்ந்த பின், கள்ளந்திரியில் கிராம மக்கள் ஒன்றுகூடி கண்மாயில் சமத்துவ மீன்பிடி திருவிழாவிற்கு நாள் குறிப்பர். இதன் மூலம் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இதன்படி இந்தாண்டு கள்ளந்திரியில் இன்று மீன்பிடி திருவிழா நடத்த நாள் குறிக்கப்பட்டது. இது தொடர்பாக சுற்றுப்புற கிராம மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.
இதன்பேரில் நத்தம், மேலூர், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, கள்ளந்திரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அதிகாலையிலேயே கண்மாய்க்கு வந்து கரையில் காத்திருந்தனர். பின்னர் காலை 6 மணியளவில் ஊர்ப் பெரியவர்கள் வந்து வெள்ளை வீசி அனுமதி அளித்தவுடன், கிராம மக்கள் கண்மாயில் சாரை, சாரையாக இறங்கி மீன்களை பிடித்தனர். இதில், ரோகு, கட்லா, ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை அள்ளினர்.
சிலருக்கு 1 கிலோ முதல் 5 கிலோ வரை எடையுள்ள பெரிய மீன்கள் சிக்கின. எதிர்பார்த்ததை விட அதிக மீன்கள் கிடைத்ததால், மீன்பிடி திருவிழாவுக்கு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றனர். உறவினர்களை அழைத்து அவர்களுக்கும் மீன்களை பகிர்ந்து கொடுத்தனர். கள்ளந்திரி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இன்று மீன் குழம்பு கமகமத்தது. சமத்துவ மீன்பிடி திருவிழாவை ஏராளமான பொதுமக்களும் கண்டுகளித்தனர்.
