ராமேஸ்வரம்: தமிழக கடலில் மீன்பிடி தடைக்காலம் என்பதால், மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்தது. சீலா மீன் கிலோ ரூ.1400க்கு விற்பனையானது. தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்.15 முதல் ஜூன் 14 வரை இரண்டு மாதம் மீன்பிடி தடை காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தப்பட்டன. விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைந்தது.
மீன்பிடித் தொழில் மூலம் வந்த நூறு சதவீதம் மீன்களில் 80 சதவீதம் மீன்வரத்து குறைந்தது. நாட்டுப் படகுகள் மற்றும் கரைவலை மீன்பிடிப்பு மூலம் 20 சதவீதம் மீன்கள் மட்டுமே தற்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. இது தமிழக மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை. மீன்வரத்து குறைந்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது. பாம்பனில் நாட்டுப்படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களில் ஒரு சில மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
ரூ.700க்கு விற்ற ஒரு கிலோ சீலா மீன் ரூ.1400க்கும், ரூ.350க்கு விற்ற பாறை மீன் ரூ.700க்கும், ரூ.400க்கு விற்ற கிழையான் மீன் ரூ.800க்கும் விற்றது. தனுஷ்கோடி கரை வலையில் பிடித்து வரும் மாவுலா ரூ.700, நகரை ரூ.400, விலை மீன் ரூ.500, சூடை ரூ.150, பாரை மீன் ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளியூர் வியாபாரிகள் மீன்களை வாங்கி சென்று விடுவதால் உள்ளுர் வாசிகளுக்கு மீன்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதனால் மீன் பிரியர்கள் கோழி இறைச்சிக்கு மாறி வருகின்றனர்.
