உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கம்மாளம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. இதனால் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சில மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தது. தற்போது, அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க மின் இணைப்பு வழங்காமல் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைகாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தபட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மேட்டுப்பாளையம் கிராம மக்களின் குடிநீர் பற்றாக்குறையினை போக்கிட இந்த குடிநீர் கிணற்றுக்கு மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
