அம்பத்தூர்: அம்பத்தூர் மேனாம்பேடு பாலகிருஷ்ணாதெருவை சேர்ந்த பிரதீப் என்பவரது உணவு தயாரிக்கும் கம்பெனியில் நேற்று நள்ளிரவு மர்ம பொருள் வெடித்து பயங்கர சத்தத்துடன் தீ பற்றி எரிந்தது.
தகவலறிந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மர்மபொருள் வெடித்து சிதறியதில் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், கம்பெனியின் அருகில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் சேதமானது. உணவு தயாரிக்கும் கம்பெனியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து உணவு தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பிரதீப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
