விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை கிடைக்க வசதியாக ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சாதாரண வகை நெல்லின் விலை ரூ.2,441 ஆக உயரும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த உயர்வு போதுமானதல்ல.
நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு காரணம், அதற்கான உற்பத்திச் செலவு முறையாக கணக்கிடப்படாதது தான். நெல்லுக்கான உற்பத்திச் செலவை கணக்கிடும்போது, நிலத்தை தயார் செய்தல், விதை மற்றும் நடவு, உரங்கள், நீர்ப்பாய்ச்சுதல், களை எடுத்தல், பயிர்ப்பாதுகாப்பு, அறுவடை செய்தல் ஆகிய செலவுகளுடன் நிலத்திற்கான குத்தகை மதிப்பு, பணியாளர்களுக்கான கூலி ஆகியவையும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
ஆனால், தொழிலாளர்கள் கூலி, குத்தகை உள்ளிட்ட பல செலவுகளை மத்திய அரசு கணக்கில் சேர்க்காதது தான் நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட காரணம் என்று அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதால், தமிழக அரசுக்கு பெரிய நிதிச்சுமை ஏற்படாது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், குவிண்டாலுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க அரசின் சார்பில் ரூ.1,059 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்தத் தொகை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு தான். எனவே, உழவர்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை கிடைக்க வசதியாக ஊக்கத்தொகையை ரூ.1,059 ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
