புதுடெல்லி: ேதா்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுவில் ஒன்றிய அமைச்சர் ஏன் இடம் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அமல்படுத்தி உள்ள புதிய சட்டத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி என்பதில், தலைமை நீதிபதிக்கு பதில் பிரதமர் நியமிக்கும் ஒன்றிய அமைச்சர் இடம் பெறுவார் என்று மாற்றப்பட்டது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி முன்வைத்த வாதங்களை விசாரித்தபோது, நீதிபதிகள் கூறியதாவது: தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது மட்டும் போதுமானதல்ல. அது பார்ப்பதற்கும் சுதந்திரமான அமைப்பாகத் தோன்ற வேண்டும். தேர்வு குழுவில் ஒன்றிய அமைச்சரவையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் ஏன் இடம்பெற வேண்டும்? நாடாளுமன்றம் நீதித்துறை மீது எத்தகைய குற்றச்சாட்டையும் சுமத்தலாம்; ஆனால், எங்களின் லட்சுமண ரேகை (வரம்பு) எதுவென்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒருபோதும் அந்த வரம்பை மீறமாட்டோம். இவ்வாறு கூறினர்.
