கிறிஸ்தவ மத தலைவர்கள் படுகொலை மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 

இம்பால்: மணிப்பூரில் 3 மத தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மெய்டீஸ், குக்கி சோ, நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்ட இன மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தாடோ பாப்டிஸ்ட் அசோசியேஷன் என்கிற கிறிஸ்தவ மததலைவர்கள் ரெவரென்ட் வி. சிட்லோர், ரெவரென்ட் கைகுலன் மற்றும் பாஸ்டர் பாவோகுலன் ஆகியோர் சுராசந்த்பூரில் கடந்த 13ம் தேதி நடந்த மதக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று விட்டு காட்சிம், கோட்லென் கிராமங்களுக்கிடையே வந்து கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த ஆயுதமேந்திய கும்பல் வழிமறித்து கொன்றது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் நோனி மாவட்டத்தில் வில்சன் தங்கா என்பவரும், அவரது மனைவியும் காரில் டோலாங் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பியபோது ஆயுதமேந்திய மர்ம கும்பல் தாக்கியதில் வில்சன் தங்கா உயிரிழந்தார்.

அவரது மனைவி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மத தலைவர்கள் 3 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், வன்முறை சம்பவங்களை தடுக்க வலியுறுத்தியும் மணிப்பூரில் உள்ள 3 மாவட்டங்களில் ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. குக்கி பழங்குடியினத்தின் குக்கி இன்பி என்ற அமைப்பு ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, குக்கி சோ மற்றும் நாகா பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காங்போக்பி, சுராசந்த்பூர் மற்றும் சண்டேல் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பல்வேறு அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலான பணியாளர்களே வந்திருந்தனர்.

 

Related Stories: