புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்காக ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், வெளியுறவு அமைச்சர்களான ஈரானின் அராக்சி, ரஷ்யாவின் லாவ்ரோவ், பிரேசிலின் வியரா, இந்தோனேசியாவின் சுகியோனோ மற்றும் தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் அமைச்சர் ரொனால்ட் லமோலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் நெருக்கடி குறித்தும், உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகப் பாதைகள் மீது அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் கவலை தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி, செங்கடல் உள்ளிட்ட சர்வதேச நீர்வழிகள் வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல்வழி போக்குவரத்து உலக பொருளாதார நலனுக்கு இன்றியமையாதது என வலியுறுத்திய அவர், ‘‘அமைதி என்பது துண்டு துண்டாக இருக்க முடியாது.
சர்தேச சட்டத்தை நிலைநிறுத்துவதும் பொதுமக்களை பாதுகாப்பதும் பொது உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை தவிர்ப்பதும் அவசியம்’’ என்றார். சர்வதேச சட்டத்தை மீறி ஒருதலைப்பட்சமாக விதிக்கப்படும் கட்டாய தடைகள் வளரும் நாடுகளை அதிகம் பாதிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையை மறைமுகமாக சாடினார். ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல்வழிப் போக்குவரத்தை உறுதி செய்ய வலியுறுத்திய ஜெய்சங்கர், பாலஸ்தீனப் பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்தியா இரு-அரசுத் தீர்வை ஆதரிப்பதாக கூறினார். இந்த மாநாட்டின் இடையே, வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது உக்ரைன் போர் தொடர்பான கருத்துக்களை ரஷ்யா வெளியுறவு அமைச்சர் லாவ்ராவ் பரிமாறிக் கொண்டார்.
