ஓமன் கடற்கரை அருகே இந்திய வர்த்தக கப்பல் மீது தாக்குதல்: அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

 

புதுடெல்லி: ஓமன் கடற்கரைக்கு அருகே இந்திய கொடியுடன் சென்ற வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் -இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் தொடங்கியதில் இருந்து ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் பல கப்பல்களை கைப்பற்றியுள்ளது. எண்ணெய் ஏற்றுமதி மற்றும் ஈரான் நலன்களை சீர்குலைக்க முயன்றதாக கூறி ஓஷன்கோய் என அடையாளம் காணப்பட்ட ஒரு எண்ணெய் கப்பலை அதன் கடற்படை கடந்த வாரம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியானது. ஒமன் வளைகுடாவில் கைப்பற்றப்பட்ட அந்த கப்பல் ஈரானின் தெற்கு கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஓமன் கடற்கரை அருகே சோமாலியாவில் இருந்து ஷார்ஜாவுக்கு இந்திய கொடியுடன் சென்ற வர்த்தக கப்பல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் தீ விபத்து ஏற்பட்டு அந்த கப்பல் மூழ்கியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ளமுடியாத செயல் என்று இந்திய வெளியுறவுதுறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்ட ஒமன் அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஐக்கிய அரபு எமிரேட்சின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் நங்கூரமிட்டு இருந்த ஒரு கப்பல் கைப்பற்றப்பட்டு ஈரான் கடல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக இங்கிலாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

 

Related Stories: