பெட்ரோல், டீசல் விலை ரூ.20 வரை உயர்கிறதா?: நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுடன் மக்கள் முற்றுகை

 

புதுடெல்லி: வளைகுடாவில் நீடிக்கும் போர் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.20 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளில் மக்கள் முற்றுகையிட்டனர்.
வளைகுடாவில் போர் பதற்றம் நீடிப்பதால் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் எப்போது வேண்டும் என்றாலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.20 வரை உயர்த்தப்படலாம் என்ற தகவல் நேற்று பரவியது. குறிப்பாக சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா,’ இந்த போர் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடித்தால், சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள இந்த விலையை மக்களிடம் சுமையை ஏற்றுவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது என்றால், மறுபுறம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. தற்போது ஒரு டாலர் 95 ரூபாய்க்கும் கீழே சரிந்திருப்பது இந்தியாவின் இறக்குமதி செலவை மேலும் அதிகரிக்க செய்துள்ளது’ என்றார்.

இதனால் பெட்ரோல், டீசல் விலையில் கடும் உயர்வு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், இந்தியாவின் பல நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் பீதியுடன் குவிந்தனர். பெட்ரோல், டீசல் போடுவதற்காக வாகனங்களுடன் அவர்கள் திரண்டனர். இதனால் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. டெல்லி-என்சிஆர், உத்தரப் பிரதேசம் முதல் குஜராத், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயரக்கூடும் என்ற தகவல் பரவியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உலகளாவிய மோதல் நிலைமை மோசமடைந்தால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.150ஐத் தொடக்கூடும் என்று சிலர் அச்சம் தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளில் மக்கள் திரண்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related Stories: