கோபி: கோபி அருகே மது போதையில் நாள்தோறும் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மனைவி அவரது ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோபி அருகே உள்ள தாசம்பாளையம், பிச்சாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (41). லாரி டிரைவர். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் அமுதா (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூர்யராஜ் (17) என்ற மகனும், சுவாதி (8) என்ற மகளும் உள்ளனர். சூர்யராஜ் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள போர்வெல் வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுவாதி தாசம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராஜூக்கு பல ஆண்டுகளாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. திருமணமானதில் இருந்தே மது அருந்திவிட்டு வந்து அமுதாவையும், தனது தாயார் வசந்தியையும் அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. 18 ஆண்டுகளாக கணவரின் இந்த கொடுமையை பொறுத்து வந்த அமுதா, குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்பும் கணவரின் கொடுமை தொடர்ந்ததால் அவருக்கு புத்திச்சொல்லி வந்தார். ஆனால் அதை தங்கராஜ் கண்டு கொள்ளவில்லை. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது போதையில் வந்து மனைவி, தாயார், மகனை தங்கராஜ் தாக்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலையும் அவர் மனைவியை அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அமுதா, கணவர் வைத்திருந்த மதுவை குடித்தார். பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து படுத்திருந்த தங்கராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். கணவரின் ஆணுறுப்பையும் அறுத்து சாக்கடையில் வீசியுள்ளார். தங்கராஜின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது பெற்றோர் சுப்பிரமணியம் மற்றும் வசந்தி ஆகியோர் மகன் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதையும், அருகில் அமுதா அரிவாளுடன் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து கோபி டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் கோபி போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் தங்கராஜின் சடலத்தை மீட்டனர். சடலத்தின் அருகே அமர்ந்திருந்த அமுதாவை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது நாள்தோறும் குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை வெட்டி கொலை செய்ததாக அமுதா கூறினார். அதைத்தொடர்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
