ஆலந்தூர் எம்.கே சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு: அகற்ற வலியுறுத்தல்

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர், எம்.கே.சாலையில் எம்.ஜி.ஆர் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட், அரிசி மண்டி போன்றவை பிரசித்தி பெற்றவை. தற்போது எம்.கே.சாலையில் மளிகை கடைகள், ஓட்டல்கள், நகைக் கடைகள், ஜவுளி கடைகள் உள்பட ஏராளமான தனியார் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்களின் வசதிக்காக, எம்.கே.சாலையில் உள்ள கடைகளுக்கு முன்பாக சென்னை மாநகராட்சி சார்பில் நடைபாதைகள் அமைக்கப்பட்டன. எனினும், எம்.கே.சாலையில் உள்ள நடைபாதையில் ஏராளமான தள்ளுவண்டி துரித உணவகங்கள், மளிகை மற்றும் பழக்கடை நடத்துபவர்கள், தங்களின் பொருட்களை நடைபாதைகளில் வரிசையாக அடுக்கி வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் அந்த நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல், சாலையில் இறங்கி நடக்க வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. மேலும், அங்குள்ள கடைகளுக்கு பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் ஆட்டோக்கள் சிறிது நேரம் நின்றால்கூட, அங்கு அதிகளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நகர்ந்து செல்ல முடியாத அவலநிலையும் நீடித்து வருகிறது. இவற்றை தவிர்க்க, எம்.கே.சாலை நடைபாதையில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை வரிசையாக அடுக்கி வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள தள்ளுவண்டி துரித உணவகங்களை உடனடியாக அகற்றி, அங்கு போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்கு காவல்துறை மற்றும் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: