சோதனை ஓட்டம், ஆய்வு பணிகள் நிறைவு; பூந்தமல்லி – வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை: அதிகாரிகள் தகவல்

 

சென்னை: பூந்தமல்லி முதல் வடபழனி இடையிலான வழித்தடத்தில் ரயில் இயக்கத்துக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதால், விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதாவது, மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்​தடத்​தி​லும், கலங்​கரை விளக்​கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்​தடத்​தி​லும், மாதவரம் – சோழிங்கநல்​லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்​தடத்​தி​லும் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதில், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 15.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்குவதற்கு திட்டமிட்டு, சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது. முதலில், கடந்த ஜனவரி மாத இறுதியில் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் மாற்றப்பட்டது. இப்போது, ஒரே நேரத்தில் பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரை ரயில் சேவைகளை தொடங்குவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், 2ம் கட்ட வழித்தடத்தை பயன்படுத்தும் பயணிகள், முதல்கட்ட வழித்தடத்துடன் எளிதாக இணைப்பை பெற முடியும். சென்னை மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்களை ஆய்வு செய்துள்ளார். அதை தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள வசதிகளை சரிபார்க்க இறுதி ஆய்வு நடைபெற்றுள்ளது. பூந்தமல்லி முதல் வடபழனி இடையிலான வழித்தடத்தில் ரயில் இயக்கத்துக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதால், விரைவில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘பூந்தமல்லி பைபாஸ் மற்றும் வடபழனி இடையே மொத்தம் 987 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. ஆழ்வார்திருநகர் மற்றும் ஆலப்பாக்கம் இடையே இரட்டை அடுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ உயர் அதிகாரிகளின் ஆய்வு மற்றும் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளதால், விரைவில் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டள்ளது. இந்த வழித்தடத்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப தரங்களை ஆய்வு செய்ய, மெட்ரோ பாதுகாப்பு ஆணையர் குழு நேரடி ஆய்வுகளை மேற்கொண்டது. தண்டவாளம், நிலையங்கள், பிரேக்கிங் அமைப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன. அதிவேக சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு, சேவையைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போரூர் முதல் வடபழனி வரை சில நிலையங்களில் ஆரம்ப கட்டத்தில் நிறுத்தம் இருக்காது.

வடபழனியில் இறங்கும் பயணிகள் அங்கிருந்து சென்ட்ரல் – பரங்கிமலை வழித்தடத்துடன் இணைந்து நகரின் பல பகுதிகளுக்கு செல்ல முடியும். ஆலப்பாக்கம், வளரசவாக்கம் உள்ளிட்ட சில நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருவதால், அவை படிப்படியாக திறக்கப்படும். இந்த வழித்தட ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பயண நேரம் வெகுவாக குறையும். மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குவது, சாலைப் போக்குவரத்தின் நெரிசலைக் குறைக்கவும் உதவும். சென்னை மெட்ரோ ரயில்வேயின் 2ம் கட்ட திட்டத்தில் மேலும் பல வழித்தடங்கள் உள்ளன. அவை படிப்படியாக முடிக்கப்பட்டு, பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் முடிந்தால், சென்னை மாநகரத்தின் போக்குவரத்து அமைப்பு மேலும் மேம்படும்,’’ என்றனர்.

ஸ்கைவாக்
வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில், பயணிகள் 2ம் கட்ட நிலையத்தின் கூரையில் இருந்து, ஸ்கைவாக் மூலம் முதல் கட்ட நிலையத்தின் கூரைக்கு செல்ல முடியும். அதேபோல், முதல்கட்ட நிலையத்திலிருந்து 2ம் கட்ட நிலையத்திற்கும் செல்லலாம்.

Related Stories: