திருப்பூர், மே 8: திருப்பூர் மாநகரின் முக்கிய பேருந்து நிலையமாக உள்ளது தியாகி திருப்பூர் குமரன் (கோவில் வழி) பேருந்து நிலையம். நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிய நிலையில் இங்கு கட்டப்பட்ட ஆண், பெண்களுக்கான இரண்டு இலவச கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. இங்கிருந்து மதுரை, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேருந்து நிலையத்தில், கட்டப்பட்ட இலவசக் கழிப்பறைகள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததால் பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்கள், முதியவர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறையினர் பேருந்து நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த கழிவறைகளை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
