அருப்புக்கோட்டை: கள்ளக்காதலை கண்டித்த கணவரை, கண்மாய் நீரில் மூழ்கடித்து கொன்ற மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள வெள்ளைக்கோட்டை வடம்போக்கி தெருவை சேர்ந்தவர் சரவணப்பெருமாள் (47), பந்தல் தொழிலாளி. இவரது மனைவி தில்லையம்மாள் (43). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் ஸ்ரீரங்கம் (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
தகவலறிந்த சரவணப்பெருமாள், மனைவியை கண்டித்தார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவர் உயிருடன் இருக்கும்வரை கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த தில்லையம்மாள், ஸ்ரீரங்கத்துடன் சேர்ந்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று முன்தினம் போதையில் இருந்த கணவரை, தில்லையம்மாள் நைசாக பேசி, அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பாப்பன்குளம் கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தயாராக இருந்த கள்ளக்காதலன் ஸ்ரீரங்கம் மற்றும் தில்லையம்மாள் சேர்ந்து சரவணப்பெருமாளை கண்மாய் நீரில் மூழ்கடித்து கொலை செய்தனர். பின்னர் ஒன்றும் தெரியாதுபோல் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். கண்மாய் நீரில் சரவணப்பெருமாளின் உடல் மிதந்தது குறித்து பொதுமக்கள், அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தில்லையம்மாள், ஸ்ரீரங்கம் ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து நேற்று விசாரணை நடத்தினர். இதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தில்லையம்மாள் கணவரை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
