தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்திய ரூ.2 கோடி மதிப்பு ஹைட்ரோபோனிக் கஞ்சா சிக்கியது: கேரள கடத்தல் குருவிகள் உள்பட 4 பேருக்கு சிறை

சென்னை: பாங்காக்கில் இருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா சென்னை விமான நிலையத்தில் சிக்கியது. இதுதொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 கடத்தல் குருவிகள் உள்பட 4 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 28 வயது ஆண் பயணி, சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்தார். அவர் மீது சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கொண்டுவந்த அழகு சாதன பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது, 3 பார்சல்களில் 900 கிராம் எடையுள்ள, உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சிக்கியது.

இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்து, ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னைக்கு நேற்று அதிகாலை வந்த லயன் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தையும், ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் சோதனை செய்தனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 26 வயது இளைஞர் ஒருவரிடம் சந்தேகத்தின்பேரில் சோதனை மேற்கொண்டபோது, பிஸ்கெட் பாக்கெட்டுகளில் மறைத்து கடத்திய ரூ.1 கோடி மதிப்பிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சிக்கியது. இதையடுத்து அவரையும் கைது செய்து, ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் பயணிகள் 2 பேரை தொடர்ந்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இருவருமே கடத்தல் குருவிகளாக செயல்பட்டு போதை பொருளை கடத்தியது தெரிய வந்தது. மேலும், கஞ்சா பார்சலை வாங்க சென்னை விமான நிலையத்தில் வெளியே காத்திருந்த 2 பேரையும் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கைது செய்தனர். சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: