சில்லிபாயிண்ட்…

* 13 ஆண்டு சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன், 41 பந்துகளில் 57 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்தார். இந்த ரன்களுடன் சேர்த்து, 50 இன்னிங்ஸ்களில் அதிகபட்சமாக 2178 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் 13 ஆண்டு சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். கிறிஸ் கெயில், 50 இன்னிங்ஸ்களில் 2061 ரன்களுடன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸியை சேர்ந்த மிட்செல் மார்ஷ் 1933 ரன்களுடன் 3ம் இடத்தில் உள்ளார்.

* ராமகிருஷ்ணா கோஷ் காயத்தால் விலகல்
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளராக ராமகிருஷ்ணா கோஷ் பங்கேற்றார். அப்போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியின்போது ராமகிருஷ்ணாவின் வலது காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சென்னை அணி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மாட்ரிட் ஓபன்: சின்னர் சாம்பியன்
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர். இப்போட்டியில் அட்டகாசமாக ஆடி போட்டியின் கடைசி வரை சின்னர் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் அவர் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அபாரமாக ஆடிய அவர் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Related Stories: