*தடுக்க வலியுறுத்தல்
அரூர் : அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டி ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் தாலுகா, எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
எல்லப்புடையாம்பட்டி ஏரிக்கரை பகுதியில் வேடியப்பன் கோயில் உள்ளது. முத்தானூர், மாவேரிப்பட்டி, கம்மாளப்பட்டி, ஈட்டியம்பட்டி, கெளாப்பாறை, கீரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
மணவாளன் சாமி ஏரி மற்றும் கோயில் வளாகப் பகுதியை உள்ளூர் மக்கள் பராமரித்து வருகின்றனர். மணவாளன் சாமி ஏரியில் இருந்து எல்லப்புடையாம்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்கான டெண்டர் விடுப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக டெண்டர் எடுத்தவர் ஏரியில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து, விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், ஏரியில் வளரும் மீன்களுக்கு உணவாக கோழி உள்ளிட்ட இறைச்சிகளின் கழிவுகள், மரவள்ளி கிழங்குகளின் கழிவுகள், கெட்டுபோன முட்டைகளை கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஏரியில் உள்ள தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எல்லப்புடையாம்பட்டியைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்தவும், ஏரி தண்ணீர் மாசடைவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
