மானூர் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்த நெல் மூட்டைகளை லாரிகளில் அனுப்பும் பணி தீவிரம்

நெல்லை : நெல்லை மாவட்டம் மானூர், கானார்பட்டி, மாவடி, கரம்பை, மதவக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி நடக்கிறது. இந்தாண்டு நல்ல மழைப்பொழிவு இருந்ததால் நெல் விளைச்சல் நன்றாக இருந்தது.

இதையடுத்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை மானூரில் செயல்படும் ஒன்றிய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு போதிய சாக்கு பைகளும் இல்லை. அத்துடன் நெல்லை ஏற்றிச் செல்வதற்கான லாரிகளும் இல்லை. இதனால் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்து காணப்பட்டன.

இதன் காரணமாக கொள்முதல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் சாலையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 20 டன் நெல் மூட்டைகளை விவசாயிகள் மலை போல் குவித்தும் அடுக்கியும் வைத்திருந்தனர்.

சாக்கு பைகள் கிடைக்காதவர்கள் நெல்லை அப்படியே சாலையில் கொட்டி வைத்திருந்தனர். பல நாட்களாக நெல் மூட்டைகளை நடு ரோட்டில் வைத்து இரவும் பகலும் விவசாயிகளே காவல் காத்து வந்தனர். விவசாயிகளின் இந்த பரிதாப நிலை குறித்த செய்தி தினகரன் நாளிதழில் விரிவாக வெளியானது.

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். நெல் மூட்டைகளை தேக்கமின்றி அனுப்ப போதிய லாரிகள் நேற்று அங்கு வரவழைக்கப்பட்டன. காலை முதல் நெல் மூட்டைகளை லாரிகளில் வேகமாக ஏற்றி அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடந்தது.

நீண்ட நாட்களாக சாலையில் காத்திருந்த தங்கள் நெல் மூட்டைகள் தற்போது பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதை கண்டு விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தங்களின் துயரத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் விவசாயிகள் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

Related Stories: