தர்மபுரி : தொப்பூர் அருகே, பலத்த சூறைக்காற்றுக்கு மரம் சாய்ந்து விழுந்ததில், குடிசை வீடு சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.
தர்மபுரி மாவட்டத்தில், அதிகபட்சமாக 103 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், தர்மபுரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தது. நேற்று முன்தினம் காலை முதல் வெயில் மந்தமாக இருந்தது. பகல் 2 மணி முதல் மேகமூட்டமாக காணப்பட்டது.
பின்னர், மாலை 3 மணி முதல் காற்று பலமாக வீசியது. மாலை 5 மணி முதல் மாவட்டத்தில் தொப்பூர், பென்னாகரம், ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தொப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதில் தொப்பூர் வண்ணார்கொட்டாய் பகுதியில் உள்ள கூலி தொழிலாளி செல்லப்பன் என்பவரது குடிசை வீடு அருகே இருந்த 20 அடி முள்மரம் வேரோடு குடிசை மீது சாய்ந்ததில், வீடு சேதமடைந்தது. அப்போது, அதிர்ஷ்டவசமாக வீட்டின் உள்ளே யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவலறிந்த வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
