இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கு ‘‘தமிழ்நாடு முன்மாதிரியாக திகழும்” ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல்

 

சென்னை: இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கு தமிழ்நாடு முன்மாதிரியாக திகழக்கூடும் என ஐஐடி மெட்ராஸ் மற்றும் பிற முன்னணி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளன.
உலகம் முழுவதும் நிலவும் காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய்மையான எரிசக்திக்கு மாறுவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இந்தியா இந்த இலக்கை நோக்கி வேகமாகப் பயணித்து வரும் வேளையில், ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘இந்தியாவின் காலநிலை மற்றும் எரிசக்தி எல்லைகள்’ அறிக்கை ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்குத் தமிழ்நாடு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நன்கு வடிவமைக்கப்பட்ட தொழில் கொள்கையானது சூரிய சக்தி உபகரணங்கள் தயாரிப்பு, பேட்டரி சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தொழில்துறை மேம்பாட்டை விட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும், அதே நேரத்தில் தூய்மையான எரிசக்தி கூறுகளுக்கு இறக்குமதியையே பெரிதும் நம்பியிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக 80 சதவீதம் சோலார் மாட்யூல் பாகங்கள் மற்றும் லித்தியம்-அயன் செல்கள் சீனாவிலிருந்து வருகின்றன. தமிழ்நாடு மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் தூய்மையான எரிசக்தி முதலீடுகளை ஈர்க்க தொழில் கொள்கையைப் பயன்படுத்தி வருகின்றன, மேலும் இவை முன்மாதிரியாகச் செயல்படக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தூய்மையான எரிசக்தி விரிவாக்கத்துடன், நிலம் சார்ந்த கார்பன் சீக்வெஸ்ட்ரேஷன் நாட்டின் கார்பன் குறைப்புப் பாதையின் மற்றொரு முக்கிய தூணாக இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது. இந்தியாவின் காடுகள், பண்ணைகள் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் அரை பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளன ; இது சாலைகளில் இருந்து 113 மில்லியன் கார்களை அகற்றுவதற்குச் சமம்.

”சிறந்த கண்காணிப்பு, தரவு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியின் மூலம், இந்தத் திறனை 400 சதவீதம் வரை அதிகரிக்க முடியும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் அஷ்வின் மகாலிங்கம் கூறியதாவது: ‘‘காலநிலை மற்றும் எரிசக்தி சவால்களை இனி தனித்தனி துறை சார்ந்த அணுகுமுறைகள் மூலம் தீர்க்க முடியாது என்று இந்த அறிக்கை தெளிவுப்படுத்துகிறது. தூய்மையான எரிசக்தி போன்ற பகுதிகளில் அறிவியல் முன்னேற்றம் அடைந்து வரும் வேளையில், இந்த முன்னேற்றங்களை இணைக்கும் திறன் பின்தங்கியுள்ளது. இந்தியா தனது குறுகிய கால பொருளாதார இலக்குகளுக்கு தேவையான உள்கட்டமைப்பில் 90 சதவீதம் இன்னும் கட்டப்பட வேண்டியுள்ளது. இது நிலைத்தன்மையை ஆரம்பத்திலிருந்தே உட்பொதிக்க ஒரு தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது’’. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: