புதுடெல்லி: 15 ஆண்டுகளாக ஒருவருடன் இணைந்து வாழ்ந்துவிட்டு, தற்போது அவர் மீது பாலியல் பலாத்காரப் புகார் அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு நபருடன் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து (லிவ்-இன் உறவு) வாழ்ந்து வந்துள்ளார். அந்தப் பெண் இளம் வயதிலேயே கணவரை இழந்து கைம்பெண்ணாக இருந்தபோது, சம்பந்தப்பட்ட நபர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாகக் குற்றம் சாட்டினார். அந்த நபர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்ததை மறைத்து, கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கு தற்போது 7 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்தச் சூழலில், அந்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்றதாகக் கூறி, அந்தப் பெண் போலீசார் வசம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, வரும் மே 25ம் தேதிக்குள் இதுகுறித்து பதில் அளிக்க அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
விசாரணையின் போது நீதிபதி பி.வி. நாகரத்னா கூறுகையில், ‘15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து, ஒரு குழந்தையும் பெற்ற பிறகு, தற்போது பாலியல் பலாத்காரப் புகார் அளிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருக்கும்போது எங்கிருந்து குற்றம் வருகிறது? முறையான திருமண பந்தம் இல்லாத இத்தகைய உறவுகளில் இதுபோன்ற பிரிந்து செல்வது ஒரு ஆபத்துதான். அவர் உங்களை விட்டுச் செல்வதால் மட்டும் அது கிரிமினல் குற்றமாகிவிடாது. சட்டப்பூர்வமான திருமணம் நடந்திருந்தால் நீங்கள் ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்புத் தொகை உள்ளிட்ட நிவாரணங்களைப் பெற முடியும். இப்போது 7 வயதாகும் குழந்தையின் நலன் கருதி இரு தரப்பும் சமரசம் செய்துகொள்ளத் தயாரா? குறைந்தபட்சம் குழந்தைக்காவது அந்த நபர் நிதியுதவி வழங்க நீதிமன்றம் உரிய வழிவகை செய்யும்’ என்று தெரிவித்தார்.
