கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதி என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ’பிரையன் (Derek O’Brien) திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மேற்குவங்க அரசியலில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே கருத்து மோதல் தீவிரமாக இருக்கும் நிலையில், நடைபெற்று வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறத் தவறினால் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக தயாரா என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ’பிரையன் புதன்கிழமை சவால் விடுத்து உள்ளார்.
மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக நினைத்து மக்களை வாக்களிக்க பிரதமர் மோடி கேட்டு கொண்டதை குறிப்பிட்டு பேசிய பிரையன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைத்தால் பிரதமர் பதவியை விட்டு விலகும் துணிவு மோடிக்கு உள்ளதா என்று சவால் விடுத்துள்ளார். மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தன்னை பாஜக-வின் முகமாக முன்னிறுத்தி, தேர்தலை ஒரு தனிப்பட்ட போட்டியாக மாற்ற மோடி முயற்சித்ததாக பிரையன் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசி இருக்கும் பிரையன், வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் நீங்கள் தான் வேட்பாளர் என நீங்களே அறிவித்தீர்கள். வீண் பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு, இந்தச் சவாலை ஏற்று கொள்ளுங்கள். மே 4 அன்று, மம்தா பானர்ஜியும் திரிணாமுல் காங்கிரஸும் வங்காளத்தில் வெற்றி பெறும் போது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? என பேசி உள்ளார்.
294 தொகுதிகளிலும் மோடி தன்னை முன்னிறுத்தியதால், தோல்விக்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான 2026 மே 4 அன்று மோடி ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்டு பிரையன் சவால் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
