சென்னை: வேதாரண்யம் மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்களை, இந்திய- இலங்கை அரசுகள் இணைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை மாவட்டம், செருதூரைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 25ம்தேதி வேதாரண்யம் கிழக்கே 12 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 3 பைபர் படகில் வந்த இலங்கையை சேர்ந்த 9 பேர், மீனவர்களின் படகில் ஏறி கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி அவர்களிடமிருந்து 49 கிலோ மீன்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவைகளைப் பறித்துச் சென்றனர்.
மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது பைபர் படகில் 5 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பைபர் படகில் வந்த 3 பேர் கடலில் விரித்திருந்த வலையை அறுக்க முயற்சித்தனர். இதில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 2 பேர் தப்பிச் சென்றனர். மற்றொருவரை நாகை மீனவர்கள் பிடித்து, இலங்கை கடற்கொள்ளையர் என்று எண்ணி விசாரித்தனர். விசாரணையில், அவர் இலங்கை காங்கேசந்துறை பகுதியைச் சேர்ந்த அயந்தன் என்பது தெரியவந்தது. தமிழில் பேசிய அயந்தனை நாகை மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திடம் ஒப்படைத்தனர்.
இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராமேஸ்வரம், மண்டபம், நாகப்பட்டினம் பகுதிகளில் வாழும் மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை கோருகின்றனர். ஆனால் இலங்கை அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாண்டினால் கைது செய்கிறது. கச்சத்தீவை மீட்கும் வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. தமிழக மீனவர்கள் மீது ஒரே நாளில் அடுத்தடுத்து கடற்கொள்ளையர்கள் தாக்கியது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை போக்கும் வகையில் இலங்கை, இந்திய அரசுகள் இணைந்து உடனடியாக தலையிட்டு, கடற்கொள்ளையர்களை கைது செய்து சிறையிலஅடைக்க வேண்டும். தமிழகத்தில் புதிய அரசு அமைந்தவுடன் கச்சத்தீவை மீட்கவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
