மேற்குவங்க 2-ஆம் கட்ட தேர்தல் – பாஜக-வின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் தேர்தல் அதிகாரிகள்.! மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்

பவானிபூர்: மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், பவானிபூர் தொகுதியில் வாக்குச்சாவடிகளை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, பாஜக தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

தேர்தல் பார்வையாளர்களில் பலர் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் பார்வையாளர்கள் என்ற பெயரில் பாஜக பயங்கரவாதம் செய்வதாக மம்தா கூறி இருக்கிறார். பாஜக சொல்வதை அப்படியே கேட்டு தேர்தல் பார்வையாளர்கள் செய்கிறார்கள் என்றும் புகார் தெரிவித்து உள்ளார்.மத்தியப் படைகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களின் தலையீடு அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டி, தங்கள் வாக்குகளை வாக்காளர்கள் தான் பதிவு செய்ய வேண்டுமே தவிர, பாதுகாப்பு படையினர் அல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறார் மம்தா.

பாஜக தேர்தலில் முறைகேடு செய்யவே விரும்புகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. எங்கள் தொண்டர்களும் மக்களும் சாக கூட தயாராக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் வாக்கு சாவடிகளை விட்டுச் செல்ல மாட்டார்கள் என்று ஆவேசமுடன் பேசினார். மேலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் வீட்டைச் சேதப்படுத்தியதாகவும், தங்கள் கட்சிதொண்டர்கள் இரவோடு இரவாகத் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்த சூழலை “பயங்கரவாதம்” மற்றும் “குண்டர்களின் செயல்” என்று விவரித்தார்.

மேலும் இதுபோன்ற அட்டூழியங்களைச் செய்வதன் மூலம் பாஜக “ஜனநாயக திருவிழாவை” அழித்து வருவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய மம்தா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அனைத்தும் முன்னதாகவே அகற்றப்பட்டுவிட்டதாகவும், வெளியாட்கள் வாக்குப்பதிவு நடவடிக்கைகளில் தொடர்ந்து அத்துமீறி தலையிடுவதாகவும் குற்றம் சாட்டினார். இப்படி தான் தேர்தல்கள் நடைபெறுமா..? அமைதியாக அல்லவா நடைபெற வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் “தொந்தரவு” செய்வதாகவும் மம்தா குற்றம் சாட்டினார், மத்தியப் படைகள் நள்ளிரவில் சோதனைகளை நடத்தியதாகவும் அவர் கூறினார். “தேர்தல் ஆணையம் எங்களை வெளிப்படையாகத் துன்புறுத்தி, சித்திரவதை செய்கிறது. நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அவர்கள் தெளிவாக பாஜகவின் தாளத்திற்கு ஏற்ப ஆடுகிறார்கள் என்று சாடியுள்ளார்.

 

Related Stories: