*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரியின் சுற்றுலா தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாரதி பூங்கா உள்ளது. இவை ஒயிட் டவுன் மைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றி சட்டசபை, ராஜ்நிவாஸ், அரசு மருத்துவமனை, டிஜிபி அலுவலகம், கடற்கரை உள்ளிட்டவை அமைந்துள்ளது.
தினமும் பூங்கா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து இருக்கும். இந்த பூங்கா புதுச்சேரி நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். பூங்காவின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆயி மண்டபம் புதுச்சேரி அரசின் சின்னமாக விளங்குவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் இந்த ஆயிமண்டபம் முன் புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர்.
வாரவிடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்து பொழுதுபோக்கும் இடமாக பயன்படுத்துகின்றனர். சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சீசா, சறுக்கு போன்ற விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழ அங்கு ஒரு செயற்கை குன்று அமைக்கப்பட்டது. இதனை சுற்றி பாதை அமைக்கப்பட்டு சிறுவர்கள் குன்றின் மீது ஏறி விளையாடுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. இவற்றின் மீது சிறுவர்கள் ஏறி இறங்கும்போது ஒரு மலை மீது ஏறி இறங்கிய உணர்வு கிடைக்கும் என்பதால் இதற்காகவே ஏராளமான சிறுவர்கள் பூங்காவுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த செயற்கை குன்றை நாளடைவில் பராமரிக்காததால் அவை சேதமடைந்துவிட்டது. இதனால் குன்றின் மீது ஏறும் நடைப்பாதை சரிந்தும், அவற்றின் மீது போடப்பட்டிருந்த தரைகள் பெயர்ந்தும் காணப்படுகிறது. மேலும், குன்றின் மீது வளர்க்கப்பட்ட தாவரங்கள் இந்த வெயிக்கு காய்ந்து இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த செயற்கை குன்று பாதுகாப்பானதாக இல்லாதபோதும் சிறுவர்கள் கீழே விழுந்துவிடுவோம் என்ற ஆபத்தை உணராமல் அந்த குன்றின் மீது ஏறி விளையாடி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் இந்த செயற்கை குன்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
