×

பயன்பாட்டுக்கு வராமலே விசைப்படகு இழுவை எந்திரம் சேதம் ரூ.20 ஆயிரத்துக்கு தனியாரிடம் வாடகைக்கு எடுக்கும் மீனவர்கள்

*துறைமுகத்திற்கு ஏற்ற எந்திரம் அமைக்க வேண்டுகோள்

தஞ்சாவூர் : மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமலேயே விசைப்படகு இழுவை எந்திரம் சேதமடைந்துள்ளது. இதனால் ரூ.20 ஆயிரத்திற்கு தனியாரிடம் மீனவர்கள் எந்திரத்தை வாடகைக்கு எடுக்கின்றனர்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடலோர பகுதியில் சுமார் 34-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு துறைமுகம் உள்ளது. மற்ற துறைமுகங்களில் நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.

மல்லிப்பட்டினம் மற்றும் கள்ளிவயல்தோட்டம் துறைமுகத்தில் விசைப்படகுகளை நிறுத்துவதற்கான கட்டுமானங்கள் கடந்த 2019ம் ஆண்டு அமைக்கப்பட்டன. சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் தற்போது தான் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் 2019-ம் ஆண்டு விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வர ரூ.6 கோடியில் வாய்க்காலுடன் இழுவை எந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இழுவை எந்திரம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்துவிட்டது. இதனால் தனியார் இழுவை எந்திரங்களை வாடகைக்கு அமர்த்தி மீனவர்கள் விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவருமான தாஜுதீன் கூறியதாவது: மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பேரில் 2019-ம் ஆண்டு துறைமுகத்தில் படகுகளை நிறுத்த கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. அப்போது உலக வங்கி நிதியுதவியுடன் படகுகளை கரையேற்றி பழுது பார்க்க இழுவை எந்திரம் அமைக்கப்பட்டது.

ஆனால் இப்பகுதியில் மீனவர்கள் பயன்படுத்தி வரும் விசைப்படகுகளுக்கு ஏற்ற கரையேற்றும் எந்திரங்களை நிறுவாமல் தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இழுவை எந்திரம் போன்று இங்கு நிறுவிவிட்டனர்.

அங்கு முகத்துவாரத்தில் இழுவை எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு சமதளத்தில் இழுவை எந்திரம் அமைக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகளை கரையேற்ற முடியவில்லை. மேலும் புதிய படகுகளை இந்த எந்திரம் மூலம் கடலுக்குள் இறக்கினாலும் சேதமடைந்துவிடுகிறது.

இதனால் இந்த இழுவை எந்திரத்தை மீனவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் தற்போது உப்புக்காற்றால் சேதமடைந்து வீணாகியுள்ளது. இதனால் படகை கரையேற்ற தனியாரிடம் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த துறைமுகத்திற்கேற்ற இழுவை எந்திரம் அமைக்க வேண்டும் இது சம்பந்தமாக அரசுக்கு மனு கொடுத்துள்ளேன்.

மேலும் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் விசைப்படகுகளை தனியார் உதவியுடன் கரையேற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே இழுவை எந்திரத்தை இங்குள்ள துறைமுகத்துக்கேற்ப மாற்றும் வரை விசைப்படகுகளை கரையேற்றுவதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thanjavur ,Mallipattinam fishing port ,Sethubavasatra… ,
× RELATED கரூரில் மூதாட்டியை கொன்றவர் சென்னையில் கைது