ராயக்கோட்டையில் தண்ணீரை விலைக்கு வாங்கி நாற்றுகளுக்கு பாய்ச்சும் விவசாயிகள்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் கடும் வெயில் சுட்டெரிப்பதால், விலை கொடுத்து தண்ணீர் வாங்கி, நர்சரிகளில் உள்ள நாற்றுகளுக்கு பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான நர்சரி பண்ணைகள் உள்ளன.

இந்த பண்ணைகளில் குடில் அமைத்து தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய், சாமந்தி, பட்டன் ரோஸ் மற்றும் பன்னீர் ரோஸ் போன்ற காய்கறிகள் மற்றும் பூச்செடிகளுக்கு ஆன நாற்றுகளை வளர்த்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். சில இடங்களில் சிறுதானிய பயிர்களுக்கான நாற்றுகளையும் வளர்த்து விற்பனை செய்கின்றனர். சீசனுக்கு தகுந்தாற்போல் வளர்க்கப்படும் காய்கறி, சிறுதானிய நாற்றுகளை, நர்சரிகளில் இருந்து வாங்கிச்சென்று, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் நர்சரி பண்ணைகளில் வளர்க்கப்படும் நாற்றுகள் வாடி, வதங்கி வருகின்றன. முன்பெல்லாம் வாரத்தில் 3 முறை மட்டுமே நாற்றுகளுக்கு தண்ணீர் விட்டு வந்தனர். ஆனால், தற்போது தினந்தோறும் நாற்றுகளுக்கு தண்ணீர் விட்டு வருகின்றனர். தண்ணீர் வசதி இல்லாத நர்சரி பண்ணையாளர்கள், விலை கொடுத்து தண்ணீரை வாங்கி, நாற்றுகளுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

Related Stories: