வேட்பு மனுவில் சொத்து தகவல்களை மறைத்தது தொடர்பாக மனு; அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களில் சொத்து குறித்த தகவல்களை மறைத்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிடக் கோரி தொகுதி வாக்காளர் செந்தில்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 2021ல் அசையும் சொத்துகள் 12 லட்சத்து 8 ஆயிரத்து 409 ரூபாயாகவும் அது தற்போது 60 லட்சத்து 64 ஆயிரத்து 152 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஆண்டு வருமானம் 8 லட்சத்து 68 ஆயிரத்து 780 ரூபாய் என 2021ல் குறிப்பிட்டிருந்த நிலையில் சொத்துகளின் அதிகரிப்பு விகிதம் என்பது நியாயப்படுத்தக்கூடிய வகையில் இல்லை. இதேபோல, சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று ராயபுரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: