இறுதி ஊர்வலங்களில் இடையூறு செய்வோரை கட்டுப்படுத்த சட்டம்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பரிந்துரை

மதுரை:மதுரை ஆலங்குளம் அருகே கடந்த மார்ச் 5ம் தேதி 25 மாணவிகளுடன் சென்ற கல்லூரி பேருந்தை, இறுதி ஊர்வலத்தில் போதையில் வந்த சிலர் வழிமறித்துள்ளனர். அவர்கள் மாணவிகளை ஆபாசமாக திட்டியதுடன், டிரைவரை ஹெல்மெட் மற்றும் காலணிகளால் தாக்கி, பேருந்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர், அஜித் குமார், சந்திரபோஸ் ஆகிய மூவரும் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
மாணவிகள் இருந்த பேருந்தை போதையில் வழிமறித்து, ஓட்டுநரைத் தாக்கியது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. இறுதிச் சடங்குகளைச் செய்வது அடிப்படை உரிமை என்றாலும், அது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதற்கான உரிமையாகவோ மாறக்கூடாது. இவர்களைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்பதால் மூவரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இறுதி ஊர்வலங்களில் பட்டாசு வெடிப்பது, மது அருந்திவிட்டு ஆபாசமாக ஆடுவது, மாலைகளைச் சாலைகளில் வீசுவது போன்ற செயல்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இறுதி ஊர்வலங்களை முறைப்படுத்தவும், விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தேவையான சட்டங்களை இயற்றுவது குறித்து தலைமைச் செயலாளர் பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 31க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: