திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா என்ற இடத்திற்கு அருகே உள்ள தேவலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் உமர் குட்டி. இவர் வசிக்கும் பகுதியில் திருடர்கள் தொல்லை அதிகம். அடிக்கடி அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து திருடர்கள் நகை, பொருட்களை கொள்ளையடித்து வந்தனர். இதனால் உமர் குட்டியின் மனைவி அனிதா தன்னுடைய 6 பவுன் நகைகளை திருடர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உமர் குட்டி தன்னுடைய வீட்டில் இருந்த பழைய பேப்பர், புத்தகங்களை நிசார் என்பவரின் பழைய இரும்புக் கடைக்கு சென்று கொடுத்தார். 3 நாட்களுக்குப் பின்னர் திடீரென உமர் குட்டிக்கு நகைகளை நோட்டுப் புத்தகத்தில் வைத்திருந்த ஞாபகம் வந்தது. அதிர்ச்சியில் உறைந்த அவர், உடனடியாக அந்த பழைய இரும்புக் கடைக்கு சென்று அதன் உரிமையாளர் நிசாரிடம் விவரத்தை கூறினார். அதைக்கேட்டு நிசாரும் அதிர்ச்சியடைந்தார்.
கடையில் குவிந்திருந்த பழைய பேப்பர், புத்தகங்களில் தேடத் தொடங்கினர். பல மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் மாலையில் சுமார் 5 பவுன் எடையுள்ள கம்மல், வளையல் மற்றும் மோதிரம் ஆகியவை கிடைத்தன. மறுநாள் 1 பவுன் எடையுள்ள செயின் கிடைத்தது. 4 கிராம் நகை மட்டும் கிடைக்கவில்லை. அந்த நகைகளை கொல்லம் தெக்குபாகம் போலீசார் முன்னிலையில் உமர் குட்டி மற்றும் அவரது மனைவி அனிதாவிடம் நிசார் ஒப்படைத்தார். நிசாரின் இந்த செயலை போலீசார் பெரிதும் பாராட்டினர்.
