புதுடெல்லி : டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, எல்எக்ஸ் 147 என்ற சுவிஸ் ஏர் விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு 4 பச்சிளம் குழந்தைகள் மற்றும் 228 பயணிகளுடன் நேற்று அதிகாலை புறப்பட இருந்தது. 28/10வது ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்ட போது, இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு புகை வந்தது. இதனை கவனித்த விமானி உடனடியாக இயக்கத்தை நிறுத்தினார். இதையடுத்து, விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர பிரிவுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் விமானத்தில் புகை பரவியதால், பயணிகள் அச்சத்தில் அலறினர். பின்னர், அனைவரையும் அவசரகால பாதைகள் மற்றும் ஏணிகள் வழியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது, பயணிகளை வெளியேற்றும் போது, தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டுள்ளது. அதில், 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
