புதுச்சேரி: புதுச்சேரியில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் 2026-27 கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்து இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரெஞ்சு மொழி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை 7 நாட்களுக்குள் அமல்படுத்த ஒன்றிய அரசு கெடு விதித்து உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு என்று தனி கல்வி வாரியம் கிடையாது.
இதனால் புதுவை, காரைக்கால் பகுதியில் தமிழ்நாடு பாடத்திட்டமும், மாகே பிராந்தியத்தில் கேரளா பாடத்திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திரா பாடத்திட்டமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசின் மெட்ரிக் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், புதுவை அரசு பள்ளிகளில் மட்டும் 1 முதல் 5ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2024-25ம் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு, முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, புதுவையில் உள்ள தனியார் பள்ளிகளிலும் படிப்படியாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை போல் புதுவையில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதில் அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கில மொழியும், தனியார் பள்ளிகளில் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் இவற்றில் ஏதாவது இரண்டு மொழியை மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது பெரும்பாலான பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.
இப்பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு (2026-27) முதல் 6ம் வகுப்பில் இருந்து ஆங்கிலம், இந்தி, தமிழ் என மும்மொழிகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பிரெஞ்சு பாடம் நீக்கப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சிபிஎஸ்இ இயக்குநர் பிரக்யா சிங், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-27ம் கல்வியாண்டு முதல் 6ம் வகுப்பில் இருந்து மும்மொழி திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுவரை அமல்படுத்தாத மற்ற பள்ளிகளும், இந்த அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். 3வது மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் விரைவில் கிடைக்கப்பெற வேண்டும். அதேநேரம் உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள், கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி 6ம் வகுப்பில் இருந்து மும்மொழியை பள்ளிகள் கற்பிக்க வேண்டும். இதுதவிர பள்ளிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த மும்மொழி விவரங்களை இறுதி செய்து, தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒரு பள்ளி 6ம் வகுப்பில் எந்த 3ம் மொழியை அறிமுகம் செய்கிறதோ, அதே மொழிதான் அந்த பள்ளிக்கான 9, 10-ம் வகுப்புகளில் விருப்ப பாடமாக இருக்கும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் மும்மொழி திட்டத்தை அமல் செய்வதை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் ஒரே ஒரு வெளிநாட்டு மொழி மட்டுமே பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பின்பற்றி புதுவையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பிரெஞ்சு மொழி பாடம் நீக்கப்பட்டு, ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய பாடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது பிரெஞ்சு மொழி படித்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் பிரெஞ்சு பாடம் படிக்க வேண்டும் என்றால், மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே புதுவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகள் முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறிவிட்டன.
சில தனியார் பள்ளிகள் மட்டுமே தமிழ்நாடு பாடத்திட்டத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. அங்கு மாணவர்கள் சேர்ந்தாலும் பிரெஞ்சு மொழி பாடம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான். மும்மொழி கொள்கையால் புதுச்சேரியின் அலுவல் மொழிகளில் ஒன்றான பிரெஞ்சு நீக்கப்படுவதற்கு அரசு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இந்தியை நீக்கிவிட்டு ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு என்ற நிலையில் மும்மொழியை புதுவையில் கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
* பிரெஞ்சு கலாசாரத்துக்கு ஆபத்து
புதுச்சேரி இந்தியாவின் குட்டி பிரான்ஸ் என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரியை ‘‘பிரெஞ்சு கலாசாரத்தின் ஜன்னல்’’ என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வர்ணித்தார். 1954 வரை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்ததால், இன்றும் இங்கு பிரெஞ்சு மற்றும் தமிழர் கலாசாரத்தின் தனித்துவமான கலவை, காலனித்துவ கட்டிடக்கலை, மற்றும் தூய்மையான, நேர்க்கோட்டில் அமைந்த தெருக்கள் ஆகியவை பிரெஞ்சு வரலாற்றை பறைசாற்றுகின்றன.
புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களை கொண்ட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு என ஐந்து மொழிகள் அலுவல் மொழியாக இருந்து வருகிறது. புதுவையில் சாதாரணமாக பேசும்போது தமிழுடன் பிரெஞ்சு வார்த்தைகளை கலந்தே பேசுவார்கள். அந்த அளவுக்கு பிரெஞ்சு மொழியின் தாக்கம் மக்களோடு கலந்திருக்கிறது. தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதால், மக்களோடு ஒன்றிணைந்துள்ள பிரெஞ்சு கலாசாரமும் படிப்படியாக காணாமல் போகும் நிலை உருவாகும்.
* புதுவை அரசு பள்ளிகளில் இருமொழியா? மும்மொழியா?
சிபிஎஸ்இ பள்ளியில் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் மார்ச் 31ம் தேதிக்குள் 6 வயது பூர்த்தியடைந்த மாணவ, மாணவிகளை தான் 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், புதுவை அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாற்றப்பட்ட பிறகும் பழைய நடைமுறைப்படியே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று ஒன்றிய அரசின் இடைநிலை கல்வி வாரியத்திடம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆக.31ம் தேதிக்குள் 5 வயது நிறைவடைந்த மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிபிஎஸ்இ பிறப்பித்த மும்மொழி கல்வி கொள்கை விவகாரம் தொடர்பாக மாநில கல்வித்துறை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, புதிய அரசு பொறுப்பேற்கும். இதனால் மாநில அரசு சிபிஎஸ்இ பள்ளியில் இருமொழி கொள்கையா? அல்லது மும்மொழி கொள்கையா? என்பதை புதிய அரசுதான் முடிவு எடுக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* ஆசிரியர்கள் வேலை இழப்பு கல்லூரிகளில் பாதிப்பு
சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதால், அதனை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வந்த ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிரெஞ்சு படித்தவர்களின் பிரெஞ்சு ஆசிரியர் பணியும் கானல் நீராகி இருக்கிறது. மேலும், புதுவையில் 12ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் பிரெஞ்சு படித்துவிட்டு கல்லூரிகளில் பி.ஏ. பிரெஞ்சு சேர்ந்து படிப்பார்கள்.
பிறகு, புதுவை பல்கலைக்கழகம், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் எம்.ஏ. பிரெஞ்சும் படித்து பட்டம் பெறுவார்கள். தற்போது பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நீக்கப்பட்டால் கல்லூரிகளிலும் பி.ஏ., மற்றும் எம்.ஏ., பிரெஞ்சு படிப்புகளில் போதிய மாணவர் சேர்க்கை இன்றி, அந்த படிப்புகள் காணாமல் போகும். பிறகு, பிரெஞ்சு பேராசிரியர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.
* இரண்டு அரசு பிரெஞ்சு பள்ளிகளுக்கு சிக்கல்
புதுவையில் கல்வே காலேஜ் அரசு பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி, பான்சியோனா அரசு பெண்கள் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி என 2 அரசு பிரெஞ்சு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பிரெஞ்சு வழியில் படித்து வருகின்றனர். இங்கு தமிழ்நாடு பாடத்திட்டமும், சிபிஎஸ்இ பாடத்திட்டமும் கடைபிடிக்கப்படவில்லை.
பிரான்ஸ் நாட்டு பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கல்வித்துறையும், புதுவை பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிடுகின்றன. இதனால் மும்மொழி கொள்கையால் இவ்விரு பள்ளிகளில் படிக்கும் பிரெஞ்சு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
* தேர்தலுக்கு பிறகு அறிவிப்பு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
மும்மொழி கொள்கை திட்டம் மூலம் இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயன்று வருவதாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். தமிழக பாடத்திட்டம் புதுச்சேரியிலும் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், மும்மொழி கொள்கைக்கு அங்கும் எதிர்ப்பு இருந்தது.
இந்நிலையில், தற்போது மும்மொழி கொள்கையை 7 நாட்களுக்குள் அமல்படுத்த ஒன்றிய அரசு கெடு விதித்து உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தலுக்கு முன் வெளியிட்டு இருந்தால் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணி அரசுக்கு பாதிப்பு வரும் என்பதால் தேர்தலுக்கு பின் அவசர அவசரமாக அறிவித்து உள்ளது. இதற்கு புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
