ஊத்துக்கோட்டை, ஏப்.23: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை-திருவள்ளுர் நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடி மதிப்பீட்டில் மேம்பாலப்பணிகள் கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி 2021ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த பாலத்தில் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள தாராட்சி, பாலவாக்கம், பேரண்டூர், பனப்பாக்கம், சூளைமேனி பகுதிகளை சேர்ந்த மக்கள் திருவள்ளூர் செல்வதற்கும், அனந்தேரி, போந்தவாக்கம், பெரிஞ்சேரி, மேலக்கரமனூர், வடதில்லை, மாம்பாக்கம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள கிராமங்களான அனந்தேரி, மேலக்கரமனூர், பேரிட்டிவாக்கம் போன்ற கிராம மக்கள் பேருந்து வசதி இல்லாததால் நடந்தும், சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் ஊத்துக்கோட்டைக்கு வந்து செல்கிறார்கள். மேலும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கும் இந்த பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்வதால், பாலத்தின் இணைப்பில் அதிர்வு ஏற்பட்டு பாலம் சேதமடைந்து, இரும்பால் போடப்பட்ட பிளேட்டுகளும் பெயர்ந்து கிடக்கிறது. இதனால், பைக்குகளில் பாலத்தில் செல்லும் போது பால இணைப்பில் உள்ள கம்பிகளின் சத்தம் கேட்பதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, இதை சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
