கோடை காலங்களில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கலாமே? அரசு முடிவெடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோடை காலங்களில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி ஏராளமான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகப்படியான வெயில் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாததால் பிற்பகல் 3.30 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒரு குழந்தை மற்றும் 5 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, பட்டாசு ஆலை விபத்து தொடர்பான வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி, ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் கருணாநிதி முறையீடு செய்தார். அதற்கு நீதிபதிகள், ‘‘ஏற்கனவே இதுதொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏன் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை’’ என கேள்வி எழுப்பினர். அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. முதன்மை செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். விளக்கம் கேட்டு தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டுமென கூறியிருந்தனர். இழப்பீடு வழங்குவது தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தொடர்ச்சியாக விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இது வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்’’ என்றனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ஈமச்சடங்கு செய்ய வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை காப்பீடு செய்த பின்னரே அவர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விபத்துக்கள் நிகழ்வது துரதிர்ஷ்டவசமானது. தொடர்ந்து, ஏப்ரல், மே, ஜூன் போன்ற கோடை காலங்களில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக அரசு தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

* பட்டாசு ஆலை உரிமம் ரத்து 3 பேர் கைது
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆலை உரிமையாளரான கோவிந்தநல்லூரை சேர்ந்த ஈஸ்வரி, அவரது கணவர் முத்துமாணிக்கம் (40) ஆகியோர் மீது வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் முத்து மாணிக்கம் நேற்று ஆஜரானார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நிஷாந்தினி உத்தரவிட்டார். அதேபோல் இந்த வழக்கில் ஈஸ்வரி, முத்து மாணிக்கத்திற்கு உதவியதாக அவரது உறவினர்கள் வைரமுத்து (30), பேரையூரை சேர்ந்த முத்துராஜ் (42), சிவகாசியை சேர்ந்த வெற்றிவேல் முருகன் (28) ஆகியோரை வச்சக்காரப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். இதனிடையே விபத்து தொடர்பாக ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: