குன்னூர், ஏப். 20: கோவையில் இருந்து ஊட்டி வந்த அரசு பேருந்தில் பயணி திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி மார்க்கெட் பகுதியில் பாரம் தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் ஜெயராம் (48). இவர் தனது சொந்த வேலை நிமித்தமாக கோவைக்கு சென்றிருந்தார். அங்கு பணிகளை முடித்து விட்டு, மீண்டும் ஊட்டி செல்வதற்காக நேற்று கோவையிலிருந்து அரசுப் பேருந்தில் வந்தார்.
பேருந்து குன்னூர் மரப்பாலம் அருகே வந்த போது, ஜெயராமிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட நடத்துனர், உடனடியாக ஓட்டுநரிடம் தெரிவித்து பேருந்தை சாலையோரம் நிறுத்த செய்தார். தொடர்ந்து, ஜெயராமிற்கு ஓட்டுநரும் நடத்துனரும் இரும்பு பொருட்களைக் கொடுத்து வலிப்பை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.
இருப்பினும், ஜெயராம் எவ்வித அசைவும் இன்றி மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெயராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
