கூடலூர், ஏப். 20: கூடலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திராவிடமணி நேற்று கூடலூரை அடுத்த கோழிப்பாலம், நந்தட்டி, சளிவயல் முதல் மைல், இரண்டாவது மற்றும் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் பிரசாரம் முடிவதற்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், திமுக வேட்பாளர் திராவிடமணி தோழமை கட்சிகளுடன் இணைந்து கூடலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், புதிதாக அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், கூடலூர் பகுதியில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பிரசாரத்தில் அவர் பேசினார். பெண்கள் மற்றும் மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்தும், இளைஞர் அணியினர் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
இந்த பிரசார நிகழ்ச்சியில் கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் லியாக்கத் அலி, ஓவேலி பேரூர் செயலாளர் செல்வரத்தினம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனிபா மற்றும் காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
